மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் வழமை போன்று தடையின்றி நடைபெற்று வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் தடைப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டதாக சில தரப்பினரால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சில தரகர்கள் (Brokers) இந்த போலியான தகவல்களை பயன்படுத்தி, திணைக்கள சேவைகள் பெறும் பொதுமக்களுக்கு தேவையற்ற அழுத்தங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்போது நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் புதிய வாகனப் பதிவு, வாகனப் பரிமாற்றப் பணிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. அதேபோன்று, வேரஹெர சாரதி அனுமதிப்பத்திரப் பிரிவும், நாடு முழுவதும் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களும் வழமையானபடி செயல்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தரகர்கள் உள்ளிட்டோரின் தவறான தகவல்களுக்கு ஏமாறாமல், உண்மையான தகவல்களைப் பெற்றுக்கொண்டு செயற்படுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.