இலங்கையின் வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (15.10.2025) தள்ளுபடி செய்யப்பட்டது.
நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. பலமுறை நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தபோதிலும் மனுதாரர்கள் வழக்கை நடைமுறைப்படியாக முன்னெடுக்காததால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய தீர்மானித்தது.
இந்த வழக்கிற்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்றும், இது உண்மையான காரணங்களுக்காக அல்லாமல் ஊடக கவனத்தைப் பெறுவதற்காகவே தாக்கல் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா நீதிமன்றத்தில் கூறினார்.
மனுதாரர்கள் வழக்கை தொடர்வதில் தவறியதை ஏற்று அந்த வாதத்துக்கு இணங்க ரிட் மனுவை தள்ளுபடி செய்யும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
இவ்வழக்கில், மனுதாரர்களுக்காக வழக்கறிஞர் சுகந்திகா, பிரதிவாதிகளுக்காக உப சட்ட மா அதிபர் மனோஹரா ஜயசிங்க, பசில் ராஜபக்ஷவுக்காக வழக்கறிஞர் ருவந்த குரே, மற்றும் ரிஷாட் பதியுதீனுக்காக ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா மற்றும் ஷிபான் மஹ்ரூப் ஆகியோர் ஆஜரானனர்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இனவாத அடிப்படையிலான அரசியல் தாக்குதலாகவே முன்னெடுக்கப்பட்டதாகவும், வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற முயற்சிகளை தடுக்கும் நோக்கத்துடனும் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.