(வாஜித் அஸ்மல்)
தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுக் கழகம் நடாத்திய ஒன்பது பேர் கொண்ட ஆறு ஓவர் வரையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 2025 அக்டோபர் 19 ஆம் திகதி எதிரொலி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியானது பொத்துவில் ஃப்ரீலியன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஃப்ரீலியன்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மார்க்ஸ்மேன் வீரர்கள் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ஓட்டங்கள் குவித்தனர்.
அணியின் முக்கிய வீரரான எச். அஸ்தக் வெறும் 14 பந்துகளில் அற்புதமான 50 ஓட்டங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
பின்னர் பதிலெடுத்தாடிய ஃப்ரீலியன்ஸ் அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 76 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்ததால் வெற்றி மார்க்ஸ்மேன் அணிக்கே சென்றது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது மார்க்ஸ்மேன் அணியின் எச். அஸ்தக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதேவேளை, முழுச் சுற்றுத் தொடரின் சிறந்த வீரர் (Series Man) விருது ஃப்ரீலியன்ஸ் அணியின் றிஸாட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சாம்பியனாகத் தேர்வான மார்க்ஸ்மேன் அணிக்கு 50,000 ரூபா பணப்பரிசும் சாம்பியன் கிண்ணமும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற ஃப்ரீலியன்ஸ் அணியினருக்கு 30,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் பரிசுக் கிண்ணமும் வழங்கப்பட்டது.
இப் போட்டித் தொடர் முழுமையாக எதிரொலி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மற்றும் அதன் நிறுவாகத்தினரின் அனுசரணையுடன் சிறப்பாக நடைபெற்றது.

