இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தில் தங்களது ஆறு மாத ஆண் குழந்தையை விற்று அந்தப் பணத்தில் போதைப்பொருள் வாங்கிய தம்பதியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான அந்த தம்பதி தங்கள் குழந்தையை புத்லாடா நகரில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.1.80 லட்சம் இந்திய ரூபாவுக்கு விற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குழந்தையின் தாய்வழி உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.
விரைவாகச் செயல்பட்ட காவல்துறையினர் தம்பதியினரைக் கைது செய்ததுடன், குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.
குழந்தையை விற்று பெற்ற பணத்தை குறித்த தம்பதியினர் போதைப்பொருள் வாங்கவும், வீட்டுச் செலவுகளுக்காகவும் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தையின் தாயார் முன்னாள் மல்யுத்த வீராங்கனை (Wrestler) என்பதும், திருமணத்துக்குப் பிறகு போதைப்பொருள் பழக்கத்திற்குள் சிக்கியதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.