வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் பல முக்கியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மற்றும் இந்தக் கொலைக்கு தொடர்புடைய மற்றொருவரைச் சார்ந்த பல முக்கிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
இந்த வழக்கில், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு சிறப்பு காவல்துறை குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இவை CCTV காட்சிகள், தொலைபேசி பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதே நேரத்தில், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளியின் இலக்கத் தகடு CCTV காட்சிகளில் தெளிவாகத் தெரியாததால், அதன் உரிமையாளர்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கி சூடு நடத்திய நபரும், உந்துருளி ஓட்டுநரும் இன்னும் தென் மாகாணத்திலேயே பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், காவல்துறை இன்று மாகாணம் முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.