Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

இளைஞர் குழுவின் தவறான தரவு சேகரிப்பால்  அஸ்வெசும திட்டத்தில் பல ஏழைகள் புறக்கணிப்பு -உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு

Posted on October 28, 2025 by Admin | 122 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட மற்றும் பிரதேசச் செயலாளர்களின் ஆலோசனைகளைப் பெறாது இளைஞர் குழுவினரின் மூலம் வீடுகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகவும் ஒரு குடும்பத்தின் தகவலை பெற ரூபா 300 கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பல ஆயிரம் ஏழை மக்கள் அஸ்வெசும திட்டப் பயனிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்கள் இக் குறைபாட்டினை சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நமது நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 37 இலட்சம் மக்களுக்கு அஸ்வெசும திட்டம் முக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் சமுர்த்தி அமைச்சுக்கும் உலக வங்கி அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இதுவரை அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் மாவட்ட மற்றும் பிரதேசச் செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, இம்முறை இளைஞர் குழுவை நியமித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட தவறான தகவல்களால் பல ஏழை குடும்பங்கள் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.”

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் மட்டுமே 550 குடும்பங்கள் தங்களை அஸ்வெசும திட்டத்தில் சேர்க்குமாறு மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒரு குடிமகனின் வாழ்நாள் முழுவதும் அவரது வருமானம், செயற்பாடுகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிராம சேவகர்கள், சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி அலுவலர்களிடம் உள்ளது. அவர்களை புறக்கணித்து இளைஞர் குழுவை பயன்படுத்தியதனால் சரியான தரவுகள் கிடைக்கவில்லை. இதனால் உண்மையில் உதவி தேவைப்படும் மக்கள் அநீதி அனுபவிக்கின்றனர் என்றார்.

அஸ்வெசும திட்டம் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேசச் செயலாளர்களுக்கு தெளிவான வழிகாட்டல்களை வழங்கி, விசேட கூட்டங்களை நடத்த வேண்டும். திட்டத்தின் செயற்பாடுகள் மறுசீரமைக்கப்பட்டு உண்மையில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாதமும் அஸ்வெசும திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கு கூடுதலாக சிறிய கிராமங்களில் வாழும் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மாற்றுத் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என உதுமாலெப்பை எம்பி பரிந்துரைத்தார்.

இது தொடர்பாக உலக வங்கி திட்டமிடல் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

“கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறோம். விரைவில் மாவட்ட மற்றும் பிரதேசச் செயலாளர்களுடன் கலந்துரையாடி அஸ்வெசும திட்டம் தொடர்பான வழிகாட்டல் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.