முஸ்லிம் தாதியர்கள் தங்கள் மத அடையாளத்தின்படி சீருடைகளை மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கு இலங்கை தாதியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தாதியர் சங்கத் தலைவர் W. A. கீர்த்திரத்ன கருத்து தெரிவிக்கையில்,
“அமைச்சர் விஜித வழங்கிய தகவல் தவறானது. இதுவரை தாதியர் சீருடை மாற்றம் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் அமைச்சரின் அறிக்கை சுகாதாரத்துறையில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் சங்கம் எச்சரித்துள்ளது.
கீர்த்திரத்ன மேலும் கூறுகையில், “புளோரன்ஸ் நைட்டிங்கேலின் காலத்திலிருந்து நிலைத்துள்ள தாதியர் சீருடை உலகளவில் தொழில்முறையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அது எந்த மதம் அல்லது கலாசார அடையாளத்தையும் பிரதிபலிப்பதில்லை. சுகாதார அமைச்சின் சீருடை குழுவும், இலங்கை செவிலியர் சபையும் அங்கீகரித்த ஒரே சீருடைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது,” எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முஸ்லிம் தாதியர்கள் தங்கள் மத உடை குறியீடுகளைக் கடைப்பிடிக்க சட்டத் தடைகள் எதுவும் இல்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.