போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களே சிறைத்தண்டனை அனுபவிப்போரில் 64 சதவீதத்தை வகிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் புதிய தேசிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு” இன்று (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உட்புற விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலை சமாளிக்க அரசாங்கம் மற்றும் பொலிஸ் திணைக்களம் மட்டும் போதுமானதல்ல என்றும் இதனை ஒழிக்க சகலரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத செயல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்படும் என்றும் இதற்காக வலுவான மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.
இந்த தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் மதத் தலைவர்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் முப்படையினர், மேலும் சுமார் 50 வெளிநாட்டு தூதுவர்கள் கலந்து கொண்டனர்.