(கொழும்பு செய்தியாளர்)
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்மாந்தோட்டை மாவட்டங்களில் உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறப்பாக சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் “ASSAD Inspire Awards” நிகழ்வு இன்று (நவம்பர் 2) கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரி கபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டுதலில் கட்சியின் கல்விப் பிரிவின் ஒருங்கிணைப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வின் தலைமைப் பொறுப்பை கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் வகித்ததுடன் பிரதம அதிதியாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி லபர் தாஹிர் கலந்து கொண்டார்.
அதிதிகளாக ஸாஹிரா கல்லூரி அதிபர் றிஸ்வி மரைக்கார், தென் மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் அஷெய்க் மசாஹிம், மேல்மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் மஹ்சூர், கொழும்பு வலய பிரதி பணிப்பாளர் மும்தாஸ் பேகம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர், கட்சியின் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகள் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

