Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நீண்ட காலமாக நிலவி வந்த இறக்காமம் நாவலடி காணிப் பிரச்சினைக்குத் தீர்வு

Posted on November 3, 2025 by Admin | 103 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலடி வட்டையில் நீண்டகாலமாக நிலவி வந்த காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஒரு முக்கியக் கூட்டம் கடந்த 2025.10.28ம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் விவசாயிகள் 21 பேருக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட காணி உத்தரவுப்பத்திரங்களுக்குள் வெளிப்புற நபர்கள் அத்துமீறி விவசாயம் செய்து வருவதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் காணி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் முஸ்லிம் விவசாயிகளுக்கு தங்களுக்குரிய காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச செயலாளர் எம். எஸ். எம். ரஸ்ஸான், தமன பிரதேச செயலாளர் திருமதி ஏ. எம். ஏ. குமாரி, மாவட்ட நில அளவைத் திணைக்களத்தின் பணிப்பாளர், அரச உயர் அதிகாரிகள் மற்றும் இரு பிரதேசங்களிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டம் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

நீண்ட நேர கலந்துரையாடலுக்குப் பிறகு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

  1. நாவலடி வட்டையில் உத்தரவுப்பத்திரம் பெற்றுள்ள 21 முஸ்லிம் விவசாயிகளுக்கான (தலா 2 ஏக்கர்) காணிகளை அடையாளப்படுத்தல்.
  2. தமன பிரதேசத்தைச் சேர்ந்த 36 விவசாயிகளுக்கான காணிகளை அடையாளப்படுத்தல்.
  3. அம்பாறை மாவட்ட காணி ஆணையாளரால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட 26 முஸ்லிம் விவசாயிகளுக்குரிய காணிகளையும் அடையாளப்படுத்தல்.

மேலும், இறக்காமம் மற்றும் தமன பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகள் இதுவரை தெளிவாக அடையாளப்படுத்தப்படாத நிலையில் அவற்றை விரைவில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் நீண்ட காலமாக நிலவி வந்த நாவலடி காணி பிரச்சினையை தீர்ப்பதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பங்களிப்பு அளப்பெரியது.