Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டுக்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு

Posted on November 4, 2025 by Admin | 142 Views

களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ராகம வைத்திய பீடத்தின் மருத்துவக் குழு உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

இதுவரை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மூன்று மாத்திரைகள் கொண்ட கூட்டு மருந்துக்கு மாற்றாக ஒரே ஒரு மாத்திரையிலேயே இதே விளைவைப் பெறக்கூடிய புதிய மருந்தை இக்குழு தயாரித்துள்ளது.

இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உயர் இரத்த அழுத்தத்தால் இரத்தக் குழாய்கள் வெடித்து ஏற்படும் பக்கவாத ஆபத்தை சுமார் 60 சதவீதம் வரை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ் ஆய்வை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் நரம்பியல் நிபுணர் வைத்தியர் பிம்ஸர சேனநாயக்க கூறியதாவது:

“பக்கவாதம் என்பது பொதுவாக இரத்தக் குழாயில் ஏற்படும் இரத்தக்கட்டி அல்லது இரத்தக் குழாய் வெடிப்பால் ஏற்படும் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாகும். எங்கள் ஆய்வில், உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளில் இந்த நிலையைத் தடுக்கும் நோக்கத்துடன் புதிய மருந்தைச் சோதித்தோம். முடிவுகள் எங்களை ஆச்சரியப்படுத்தின. இந்த மருந்து பக்கவாதம் மீண்டும் ஏற்படுவதை 60% வரை தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்தோம்.”

இதய நோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க மேலும் தெரிவித்தார்:

“இலங்கையில் 30 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 35% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இவர்களில் பலர் தமக்கு இந்நிலை இருப்பதை கூட அறியாமல் இருக்கின்றனர். இந்த புதிய மருந்து, இரத்த அழுத்தத்தை மிக விரைவாகக் கட்டுப்படுத்துவதுடன், நாள் முழுவதும் அதே நிலைமையைத் தொடர்ந்து பேணுகிறது. இதன் மூலம் பக்கவாதம் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்தைப் பெரிதும் குறைக்கலாம்.”