(அபூ உமர்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள அரச காரியாலயங்களில் உத்தியோகபூர்வ அனுமதியின்றி ஐந்து நபர்கள் சென்று தீர்மானங்களை மேற்கொண்டு வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்நசேகர மற்றும் கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்கள் மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் இணைந்து முடிவெடுக்கும் தளமாகும். ஆனால் சில இடங்களில் இது தனியார் நிறுவனங்களின் போன்று இயங்கி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதேச சபை தலைவர்களுக்கும் தெரியாமல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது. அரச அதிகாரிகள் அரசியல் சார்பில்லாமல் நடுநிலையுடன் செயல்படுவது அவசியம்” என்றார்.
இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோர பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைபெறும் செயற்பாடுகள் குறித்து தாம் விசேட கவனம் செலுத்துவதாகவும் அம்பாறை மாவட்ட ஆளுங்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கூறினார்.
உதுமாலெப்பை எம்.பி. மேலும் கருத்துரைக்கையில்,
“இந்த வகை உத்தியோகபூர்வமற்ற நடவடிக்கைகளைத் தடுக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்படாவிடில் இவ்விடயத்தினை உயர்மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்” எனவும் எச்சரித்தார்.