Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

Posted on November 20, 2025 by Admin | 215 Views

(கல்முனை செய்தியாளர்)

பாராளுமன்ற கட்டடத்தில் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம். எச். அபயரத்ன தலைமையில் நடைபெற்ற பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலக மற்றும் உப-பிரதேச செயலகப் பிரிவுகளை முன்வைத்து அரசியல் இலாபம் தேடும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

கல்முனை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் (70%) மக்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவுகளும், தமிழ் (30%) மக்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இம்மக்களுக்கிடையிலான கிராம சேவகர் பிரிவு அமைப்பு, காணி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாகப் பேசப்பட்டன. இரண்டு சமூகங்களின் தலைவர்களும் முன்பே பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கையில் உடன்பட்டிருந்தனர் என்பதை உதுமாலெப்பை நினைவூட்டினார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் முன்வைக்கும் இன முரண்பாடுகள் வலுப்படுத்தும் கருத்துகள் கவலைக்குரியது என அவர் கூறினார். கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவில் காணி ‘கொள்ளை’ நடப்பதாக கூறி அதனை இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்ற கோடீஸ்வரனின் வாதமும் அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவதாக உதுமாலெப்பை விமர்சித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“அம்பாறை மாவட்டத்தில் நான், கோடீஸ்வரன் மற்றும் அஷ்ரப் தாஹிர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான நாளிலிருந்தே தமிழ்–முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளை உரையாடலின் மூலம் தீர்ப்போம் என ஒப்புக்கொண்டோம். இதை மீறி இனங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பது ஏற்க இயலாதது.”

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் 10 ஆண்டுகளாக நீடித்த காணிப் பிரச்சினையை, மாவட்ட அரசாங்க அதிபரும் நானும் இணைந்து தீர்த்ததைக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற பிரச்சினைகளையும் சிநேகபூர்வமான பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதானமாகத் தீர்க்கலாம் என்றார்.

இக்கருத்துகளுக்கு பதிலளித்த அமைச்சர் அபயரத்ன, கல்முனை உப-பிரதேச செயலகத்தைச் சார்ந்த மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்றார். தமிழ்–முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரே முடிவுக்கு வந்தால் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது எளிதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர் ஆலோக்கபண்டாரவும் இது பற்றி கூறுகையில், இப்பிரிவு தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் உள்ளதுடன் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே, இரண்டு சமூகங்களும் இணைந்து ஒரே கருத்துக்கு வருவது மிகவும் நல்லது என கூறினார்.