அறிவு என்பது மனிதனின் உண்மையான செல்வம். அச் செல்வத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும் உன்னத செயற்பாடாக அட்டாளைச்சேனை பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஐந்து நூலகங்களுக்கு புதிய நூல்கள் வழங்கும் நிகழ்வவானது அண்மையில் பிரதேச சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும், பொது நல சிந்தனையால் சமூக முன்னேற்றத்தை நேசிப்பவருமான ஐ.ஏ. ஸிறாஜ் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த பெறுமதியான நூல்களை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களுக்கு (19) அன்று வைபவ ரீதியாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நூல்கள் அறிவைத் தேடும் இளம் மனங்களுக்கும், வாசிப்பின் பேரின்பத்தை நேசிக்கும் பொதுமக்களுக்கும் புதிய சிந்தனையை கொண்டு வரும் என்பதில் ஐ.ஏ.ஸிறாஜ் தனது நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டார். வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் இம்முயற்சியனது இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் ஒரு படியாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில்,பிரதேச சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.