நாடு முழுவதும் நிலவி வரும் மழைக்கால வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், மேலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரைத் தாண்டிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அவ்வப்போது ஏற்படலாம்.
நாட்டின் பிற பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் திடீரென பலத்த காற்று வீசுவதும் மின்னல் ஆபத்துகளும் அதிகரிக்கும் நிலையில், அவற்றால் ஏற்படக்கூடிய சேதத்தை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளும்படி வானிலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.