(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக வெள்ள நீர்மட்டம் பல இடங்களில் அபாயகரமாக அதிகரித்துள்ளது. தினசரி வாழ்வாதாரம் தடுமாறிய மக்களின் நிலைமை இதுவரை இல்லாத அளவு கவலைக்குரியதாக மாறியிருந்தபோதிலும் அந்தக் கவலையைப் பகிர்ந்து மக்களுடன் நேரடியாக களத்தில் குதித்த அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன.
கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் உருவானபோது பிரதேச சபை உறுப்பினர்களை மக்கள் தேடி அலைவதே மக்கள் எதிர்கொண்ட சவாலாக இருந்தது. ஆனால் இம்முறை கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் தமது உடல் நலத்தினைக் கூட பொருட்படுத்தாமல் வெள்ளநீர் சூழ்ந்த வீதிகளில் இறங்கி மக்களுக்காக அயராது உதவுகின்றனர். இந்த மனிதநேய பணியே இன்று மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.
முன்னர் மழை பெய்தாலே முகநூல் பக்கங்கள் “இந்த வீதியில் நீர் வழிந்தோடவில்லை- பிரதேச சபை கவனிக்கவில்லை” என்று புகைப்படங்களால் நிரம்பியிருக்கும். ஆனால் இம் முறை அப்படியில்லை. அத்தகைய புகைப்படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது தற்போதைய தவிசாளரின் திறம்பட்ட நிர்வாகமும் துரிதமான செயல்பாட்டையும் வெளிப்படையாக நிரூபிக்கிறது.
தவிசாளர் உவைஸ் கட்சிப்பாகுபாடு பாராமல் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றுபடுத்தி மக்களுக்காக வேலை செய்யச் செய்வது குறிப்பிடத்தக்க ஒன்று. அதனைப் போலவே, உறுப்பினர்களும் நேரம், காலநிலை, தனிப்பட்ட சிரமங்கள் என்று எதையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணி செய்து வருவது உண்மையில் பாராட்டத்தக்கது.
தவிசாளர் உவைஸ் அவர்களின் தூர நோக்கான சிந்தனையால் வாரந்தோறும் ஒரு வட்டாரத்தினை தெரிவு செய்து அப்பகுதியில் உள்ள வடிகானினை துப்பரவு செய்து வந்தமையானது இன்றைய மழைக்காலத்தில் நீர் தடையின்றி வழிந்தோட காரணமாக அமைந்தது.
என்றும் தன் பிரதேசத்தை உயிராக நேசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களின் வழிகாட்டுதலில் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் வாடும் மக்களுக்கு உதவ முனைந்து வீதிகளை , வடி கான்களை சுத்தம் செய்து, நீரேற்றங்களை அகற்றி, ஆபத்தான இடங்களை பாதுகாப்பாக மாற்றும் பணிகளில் தவிசாளரும் உறுப்பினர்களும் இரவு பகலாக சேவையாற்றும் இம் மனிதநேய சேவையானது பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.







