தெற்கு அந்தமான் கடலில் உருவாகி வலுப்பெறும் குறைந்த காற்றழுத்த மண்டலத்தின் தாக்கம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதியிலும் மழை அதிகரிக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் கனமழை பதிவாகக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் நிலைகளில் நீர்மட்டம் ஏற்கனவே உயர்வடைந்துள்ளதால் திடீர் கனமழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (25) முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாகக் கூறியுள்ள திணைக்களம் தங்களது முன்கூட்டிய வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை கவனமாகப் பின்பற்றும்படி, அனைத்து நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அவை வழியாகச் செல்லும் பயணிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.