(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக முகாமைத்துவ சேவையின் முதலாம் தர உத்தியோகத்தரான ஏ.ஜீ. முபாரக் இன்று (27) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வழங்கிய நியமனத்தின் அடிப்படையில் பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முபாரக் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முதல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எல்.எம்.இர்பான் அவர்கள் தற்போது அக்கறைப்பற்று பிரதேச சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரக் 26 ஆண்டுகளாக முகாமைத்துவ சேவையில் அனுபவம் பெற்றவர். 1999 ஆம் ஆண்டில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் தனது சேவையை ஆரம்பித்த அவர் பின்னர் கல்முனை வலயக் கல்வி அலுவலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அலுவலகம் (அக்கரைப்பற்று), அட்டாளைச்சேனை பிரதேச சபை, மாகாண கணக்காய்வுத் திணைக்களம் போன்ற பல முக்கிய அலுவலகங்களில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராகவும் சேவையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

