நாட்டில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (UAE) அனுப்பிய மேலும் இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் நேற்று இரவு (02) இலங்கையை வந்தடைந்தன.
C-17 வகை விமானங்களில் இரண்டு மீட்புப் படகுகள், தேடுதல் பணிகளுக்கான நான்கு K9 நாய்கள், டபிள் கெப் மற்றும் SUV வகை மீட்பு வாகனங்கள், லொரிகள் உள்ளிட்ட பல்வேறு அவசர மீட்பு உபகரணங்களும், 53 உறுப்பினர்களைக் கொண்ட விசேட நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புக் குழுவும் (USAR) அடங்கின.
இவ்வுதவிப் பொருட்கள் கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதர் கௌரவ கலீத் நாசர் அல்அமேரி (H.E. Khaled Nasser Al Ameri) மற்றும் UAE நிவாரணக் குழுத் தலைவர் கலாநிதி ஹமூத் அலஅபாரி (Dr. Hamood Alafari) ஆகியோரால் இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மத்திய கிழக்கு பிரிவு பிரதிப் பணிப்பாளர்கள் இஷாரா டி சில்வா மற்றும் தினுஷிகா தசநாயக்க இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றனர்.
நாட்டின் நெருக்கடியான இந்த சூழலில் UAE வழங்கிய துரிதமான மற்றும் அரிய மனிதாபிமான ஆதரவிற்கு இலங்கை அரசு ஆழ்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.