நாட்டை அதிர்ச்சியடையச் செய்த வெள்ளம், மண்சரிவு, அதிக மழை போன்ற இயற்கையின் சீற்றத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது உயிர்களையும், உறவுகளையும், வீடுகளையும் இழந்துள்ளனர். நாடு முழுவதும் மக்கள் உணவு, தங்குமிடம், மின்சாரம் ,குடிநீர், தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாமல் துயரத்தில் தத்தளிக்கின்றனர்.
பல மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு ஆகிய அடிப்படை வசதிகள் பல நாட்களாக முற்றிலும் துண்டிக்கப்பட்டு மக்களின் வாழ்வியலை முடக்கியுள்ளது.
இந்த மனித துயரத்தை உணர்ந்த அரசாங்கம் நாடு முழுவதும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வியியல் கல்லூரிகளை மூடிவைத்துள்ளதுடன் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான அனைத்து பயிற்சி பட்டறைகளையும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
இத்தகைய துன்பகாலத்திலும் அக்கரைப்பற்று கல்வி வலயம் எடுத்த முடிவு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு சில மணி நேரம் மட்டுமே சுழற்சி முறையில் மின்சாரமும் குடிநீரும் விநியோகிக்கப்படுவதுடன் தொலைத்தொடர்புகள் செயலிழந்த நிலையில் கூட அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கரைப்பற்று கல்வி வலயம் மேற்கொண்டு அதற்கான கடிதங்களும் அறிவிப்புகளும் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பியுள்ளதுடன் அவற்றை ஆசிரியர்களுக்கான வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிடுமாறும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஒரு மணி நேரம் மின்சாரம் , ஒரு மணி நேரம் குடிநீர் என்ற தற்காலிக சுழற்சி வழங்குதலே கிடைக்கிறது. அத்தகைய காலத்திலும் “ஆசிரியர்கள் பட்டறைக்கு வர வேண்டும்” என்ற வகையில் உத்தரவு வெளியிடுவது நிலமையை புரியாத அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் நிர்வாக முடிவுகள் மீதான சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவரின் கையொப்பத்துடன் இந்த உத்தரவு வெளியிடப்பட்டிருப்பது “மக்கள் எந்த துன்பத்தில் இருந்தாலும் அதிகார சக்கரம் அதன் வழியிலேயே சுழலும்” என்ற மனோபாவத்தை பிரதிபலிக்கிறது.
நாடு பேரழிவின் துயரத்தில் தத்தளிக்கும் வேளையில் நாட்டின் அனைத்து தரப்பினரும் மீட்பு, நிவாரணப் பணிகளில் இறங்கியபோது அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் இந்த முடிவு மனிதநேயம் மிக்க அணுகுமுறையா அல்லது கண்மூடிய நிர்வாக அகம்பாவமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொலைத்தொடர்பு செயலிழந்த நேரத்தில்
1. ஆசிரியர்களுக்கு இவர்களது தகவல் சென்றடையுமா?
2. பேரழிவு சூழலில் பட்டறை நடத்துவதன் மூலம் எத்தகைய கல்வி முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்?
3.இடரான காலத்தில் ஆசிரியர்கள் இந்த பட்டறைக்கு வர முடியுமா என்பதை யாராவது சிந்தித்தார்களா?
நாட்டின் நிலைமையை உணராத அதிகாரிகளின் முடிவுகள் கல்வி துறை மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்குகின்றன.
அக்கரைப்பற்று கல்வி வலயம் எடுத்த இந்த கடுமையான நிர்வாகப் போக்கு சமூக அக்கறையற்ற செயற்பாடாக இக்கட்டத்தில் நோக்க வேண்டியுள்ளது.
கல்வி அதிகாரிகள் தங்களது வீடுகளில் கிடைக்கும் மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு வசதிகளை வைத்து ஒரு கல்வி வலயத்திற்கான முடிவை எடுக்காமல் நாட்டினதும், தங்களது கல்வி பிரதேசங்களினதும் நிலைமையை கருத்திற்கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
ஆகவே, அம்பாறை மாவட்டத்தில் மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு வசதிகள் இயல்பான நிலைக்கு திரும்பிய பிறகு இந்த பயிற்சி பட்டறைகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அக்கரைப்பற்று கல்வி வலயம் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் அதைவிட்டு விட்டு விடாப்பிடியாக செயற்பட முற்படுவது மனிதநேயமற்ற அதிகாரிகளின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

