எதிர்வரும் நாட்களில் மழை அதிகரித்தால் மொரகஹகந்த அணையின் நீர்மட்டம் உச்ச அளவை எட்டும் வாய்ப்புள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
அணை உச்சநீர்மட்டத்தை எட்டும் சூழலில், நீர் வரத்து அதிகரித்தால் வான்கதவுகளைத் திறக்க வேண்டியிருக்கும் என வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வான்கதவுகள் திறக்கப்பட்டால் அதிகப்படியான நீர் அம்பன் கங்கைக்கு திறந்துவிடப்படும்.
இதனால் அம்பன் கங்கை மற்றும் மகாவலி கங்கைகளின் நீர்மட்டம் உயரும் சாத்தியம் உள்ளதால் இந்த இரண்டு ஆறுகளின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது மொரகஹகந்த அணையின் நீர் நிரப்பம் 98.87 சதவீதமாக உள்ளது. வரவிருக்கும் நாட்களில் மழை அதிகரித்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மகாவலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்கதவுகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் எலெஹெர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு அறிவிப்புகள் மூலம் உடனடியாக தகவல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மொரகஹகந்த அணை பொறுப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.