இன்று முதல் (7)எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற் துறையின் மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு இலங்கையை மையமாகக் கொண்டு வளிமண்டலத்தில் உருவாகும் தளம்பல் நிலையும் அதிக ஈரப்பதத்தைக் கொண்ட கீழைக்காற்றுகளின் வருகையும் இந்த மழைக்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் விளக்கினார்.
குறிப்பாக டிசம்பர் 9 முதல் 12ஆம் திகதிக்குள் நாடு முழுவதுமும் கனமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம். மத்திய, ஊவா, மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்யக்கூடும். அதேசமயம் தென், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் மிதமான மழையும் காணப்படும் என அவர் கூறினார்.
மலையகப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் சில நாட்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது மக்களுக்கு அவசியம் என்று பிரதீபராஜா எச்சரித்தார். மலையக மண் ஏற்கனவே அதிக ஈரத்தன்மையுடன் இருப்பதாலும் வெப்பநிலை குறைந்து நீராவியாதல் குறைந்திருப்பதாலும் அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் செயல்படும் நீர்ப்பாசன அதிகாரிகள் குளங்களின் நீர்மட்டத்தை முழுத் திறன் அளவில் வைத்திருக்காமல் சில அளவு குறைத்துப் பராமரிப்பது பாதுகாப்பானது எனவும் அறிவுறுத்தினார்.
டிசம்பர் 8 முதல் 14 வரை கனமழை எதிர்பார்க்கப்படும் நிலையில் தாழ்வுபகுதிகள், குளங்கள், ஆறுகள் அருகாமையில் வசிக்கும் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.