பெண்களைப் பற்றி தெரிவிக்கும் கருத்தினால் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியைப் பற்றிய அவரது பேச்சால் மீண்டும் உலகளவில் கவனம் பெற்றது.
இத்தாலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மெலோனியை நோக்கி “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்களே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” என ட்ரம்ப் கூறினார். இது சர்வதேச ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
அதையடுத்து “இதனை அமெரிக்காவில் நான் சொல்லியிருந்தால் என் அரசியல் வாழ்க்கை முடிந்திருக்கும்” என ட்ரம்ப் நகைச்சுவையாகச் சொன்னதும் மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த கருத்துக்கள் இணையத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தன.
மேலும் தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் பற்றிய ட்ரம்பின் மற்றொரு பேச்சும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதார சாதனைகளை விவரித்த அவர் “நம்முடைய சூப்பர் ஸ்டார் கரோலின் கூட இன்று வந்திருக்கிறார். அழகான முகம் , இயந்திர துப்பாக்கிபோல் நிற்காமல் பேசும் உதடுகள் அதுதான் அவள்” என்றார்.
பெண்களைப் பற்றிய அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.