(அபூ உமர்)
மத்திய மலைநாட்டில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பாதுகாப்பான வீட்டுத்திட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை முன்னெடுக்க வேண்டும் என கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நமது நாட்டில் சுனாமி வந்த பின்பு கடற்கரையோரங்களிலிருந்து 300 மீற்றர் தூரத்திற்கு அப்பால் பொது மக்கள் கட்டிடங்களை நிர்மாணிக்கலாம் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. சில காலம் சென்ற பின் பொது மக்களும், திணைக்களங்களும் சுனாமியின் பாதிப்பினை மறந்து 250 மீற்றர் தூரத்தினை குறைத்து 50 மீற்றராக அடையாளப்படுத்தி உள்ளனர்.
இதேபோன்று தான் சூறாவளி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற நிகழ்வுகளையும் எமது மக்களும் திணைக்களங்களும் மறந்து விடுவதற்கு முன் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை அனர்த்தங்கள் தொடர்பாக நிரந்தர தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.
இப்பிரதேசங்களை வழமையான சூழ்நிலைக்கு கொண்டு வருவதற்கான இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவியது இச்சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர சபை, பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை பிரதேச சபைகளும் ஒன்றிணைந்து பாரிய இயந்திர உபகரணங்களை கம்பளை, கெலிஓயா, வெளிகல்ல, கலுகமுவ உட்பட பல பிரதேசங்களுக்கு கிழக்கு மாகாண மக்களும் வருகை தந்து இச்சந்தர்ப்பத்தில் தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்கினர். இவ்விடயத்தில் உதவிய கிழக்கு மாகாண ஆளுநர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.