Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கடமை நேரத்தில் மாயமாக மறையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம சேவகர்கள் – தேடி அலையும் பொதுமக்கள்

Posted on December 17, 2025 by Admin | 510 Views

கிராம மட்டத்தில் அரசாங்கத்தையும், பொதுமக்களையும் இணைக்கும் முதன்மை பாலமாக இருப்பவர்கள் கிராம சேவகர்கள் (GS). ஒரு ஏழை விவசாயியின் கண்ணீரிலிருந்து  அர‌ச உத்தியோகத்தர்களின் பிரச்சினை வரை அனைத்திற்கும் முதல் கதவாக நிற்க வேண்டியவர் கிராம சேவகரே. ஆனால் அந்த கதவுகள் பல இடங்களில் பூட்டப்பட்டிருக்கின்றன என்பதே இன்றைய கசப்பான உண்மை.

அரச விதிமுறைகளின் பிரகாரம் கிராம சேவகர்கள் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் பிரதேச செயலகம், கிராம சேவகர் காரியாலயங்கள் மற்றும் வெளிக்கள கடமைகளில் கட்டாயமாக ஈடுபட வேண்டும்.

அதற்கமைய திங்கள் கிழமைகளில் பிரதேச செயலகத்திலும், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தங்களது கிராமப் பிரிவுகளில் உள்ள காரியாலயத்தில் காலை 08.30 முதல் மாலை 04.15 வரையும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிக்கள (Field)  கடமைகளிலும்(தனிப்பட்ட தேவைகளுக்குச் செல்ல அனுமதி இல்லை), சனிக்கிழமைகளில் தனது காரியாலயத்தில் காலை 08.30 முதல் 12.30 வரையும் சேவை வழங்க வேண்டும் , வெள்ளிக்கிழமை அவர்களுக்கு ஓய்வு தினமாகும்.

கிராம சேவகரின் காரியாலயங்களில் அவரது பெயர், தொலைபேசி இலக்கம், விடுமுறை அல்லது சுகயீனம் காரணமாக அவர் விடுமுறையிலிருக்கும் போது பதில் கடமையாளர் தொடர்பான விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அவரது காரியாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் பின்பற்றப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தால் வீடு இழந்த மக்கள் நிவாரணம் பெற முடியாமல் கிராம சேவகரை தேடி அலைய வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. “வயலுக்குச் சென்றேன்”, “வேறு ஊரில் இருக்கிறேன்”, “நான் வந்தவுடன் கையொப்பம் போட்டு தருகிறேன், நான் வந்தேன் வீட்டில் உங்களை காணவில்லை நான் வேறொரு இடத்தில் நிற்கிறேன்” என்ற வசனங்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சில கிராமசேவகர்களின் நிரந்தர சாக்குபோக்குகளாக மாறியுள்ளது. பொதுமக்களை அடிமைகள் போல் நடத்தும் இந்தப் போக்கு மக்கள் சேவையை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

தேசிய அடையாள அட்டை பெற மக்கள் வழங்கும் பணத்தை பெற்றுக்கொண்டு அந்தப் பணத்தை தனது தேவைக்கு பயன்படுத்தி விட்டு மாதக் கணக்கில் பொது மக்களின் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பது, அரசு வழங்கும் நிவாரணங்களில் சிலவற்றை தனக்கு/ தனக்கு தெரிந்தவர்களுக்கு  ஒதுக்கிக் கொள்வது, அரசு கொடுக்கச் சொன்னாலும் நான் உனக்கு தரமாட்டேன் எனக் கூறி நிவாரணங்களை கோரும் மக்களை இழிந்துரைப்பது, அடையாளச் சான்றிதழ் பெற வரும் மக்களை இன்று வா , நாளை வா என மக்களை ஏமாற்றுவது, கடமை நேரங்களில் காரியாலயத்தில் இல்லாமல் மேய்ந்து திரிவது (இன்னும் சிலவற்றை நாகரீகம் கருதி இவ்விடத்தில் தவிர்த்திருக்கிறோம் – தேவைப்பட்டால் கிராம சேவகரின் பெயருடன் பதிவிடப்படும்) என குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சில கிராம சேவகர்கள் தொடர்பில் வெளிவரும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இவ்வாரான இழிவான செயற்பாடுகளை மேற்கொள்ளும் கிராமசேவகர்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அறிந்திருக்கிறாரா? அல்லது அறிந்தும் அறியாதது போன்று பாசாங்கு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிராம சேவகர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நேர்மையாக சேவை செய்து வரும் கிராமசேவகர்களின் நற்பெயர் பாதுகாக்கப்பட வேண்டியதுடன் பாராட்டப்பட வேண்டியர்கள் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து கொண்டு இவ்வாரான ஈனச் செயல்களை செய்கின்ற  சில கிராமசேவகர்கள் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது இவர்களை திருத்துவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் குறித்த கிராமசேவகர்களினால் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும்  அநீதிகள் தொடர்பிலான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அவை எல்லோரும் அறியும் வகையில் பதிவேற்றப்படும் என்பதனையும் இங்கு ஞாபகமூட்டுகிறோம்