நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தற்போது தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனுடன் நடுத்தர அளவிலான மேலும் சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
இந்த நிலைமையால் வெள்ள அபாயம் அல்லது கட்டுப்பாடற்ற நீர் வெளியேற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்றும், இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
எனினும், எதிர்வரும் பருவமழை நிலைமைகளைப் பொறுத்து ஆறுகளின் நீர்மட்டங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும், அதனால் நிலவரத்தை கவனமாக கண்காணித்து செயல்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் சில இடங்களில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஈரவலயத்தின் பல பகுதிகளில் சுமார் 25 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சியும், மத்திய மலைநாடு மற்றும் களனி கங்கை படுக்கையை அண்டிய சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அருகான மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 25 முதல் 50 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த மழைவீழ்ச்சியின் காரணமாக நில்வலா நதியின் நீர்மட்டம் சிறிய அளவில் உயர்வைக் காட்டினாலும், தற்போது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் இல்லை என பொறியியலாளர் சூரியபண்டார விளக்கினார்.
மேலும், மஹாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி பகுதியில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், அது தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும், பிற நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் மழை பெய்திருந்தாலும் வெள்ள அபாயம் ஏற்படும் அளவிற்கு நீர்மட்டம் உயரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.