(அட்டாளைச்சேனை செய்தியாளர் ஹஸன்)
புனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் ஏற்பாடுகள் குறித்து விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புனித ரமழான் மாதத்தில் ஆன்மிகச் சிந்தனைகளை சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் வருடாந்தம் நடாத்தி வரும் ஹதீஸ் மஜ்லிஸின் 15-வது ஆண்டு நிகழ்வை சிறப்பாக ஒழுங்குபடுத்தும் நோக்கில் விசேட ஆலோசனைக் கூட்டம் ஹதீஸ் மஜ்லீஸ் குழுவின் தலைவர் எம்.ஐ.சப்ரி மெளலவி(ISA) தலைமையில் 2025.12.21ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் ரமழான் மாதத்தில் நடைபெறவுள்ள 15வது ஹதீஸ் மஜ்லிஸை மேலும் சிறப்பாகவும் பயனுள்ள நிகழ்வாகவும் மாற்றுவது தொடர்பாக விரிவாக கருத்துரைக்கப்பட்டன. ஹதீஸ் மஜ்லிஸில் நிகழ்வில் மார்க்க உபன்னியாசம் நிகழ்த்தவுள்ள உலமாக்களின் தெரிவு, நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பு, நேர அட்டவணை, பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வழிமுறைகள் மற்றும் இளைஞர் சமூகத்தை ஆன்மிக வழிப்பாதைக்கு வழிநடத்தும் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
சமூகத்தில் ஒற்றுமை, நல்லொழுக்கம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு ஹதீஸ் மஜ்லிஸ் அமைய வேண்டும் என்பதிலும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.
இவ் ஆலோசனைக் கூட்டத்தில் அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஆலோசகரும் அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவரும் ஊரின் மூத்த உலமாவுமான மௌலவி யு.எம். நியாசி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல். பாயிஸ், கலாசார மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள், பல்வேறு பள்ளிவாசல்களைச் சேர்ந்த உலமாக்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி கூட்டத்தை சிறப்பித்தனர்.




