இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளராக காற்பந்து சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் கே.எல். சமீம் இன்று ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இறக்காமம் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு காற்பந்து சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் கே.எல். சமீம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஆதரவு வழங்கியிருந்தார.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விசேட சபைக் கூட்டத்தில் சபைக்கு சமுகமளித்த எட்டு உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் கே.எல். சமீம் உதவித் தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக உதவித் தவிசாளராகப் பதவி வகித்த என்.எம். ஆசீக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில் அதனை நிரப்புவதற்காகவே இவ்விசேட அமர்வு நடத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நான்கு உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னணி, அண்ணாசி மற்றும் காற்பந்து சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த தலா ஒருவரென மொத்தம் எட்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
உதவித் தவிசாளர் பதவிக்கு கே.எல். சமீம் அவர்களின் பெயர் மட்டும் முன்மொழியப்பட்டதையடுத்து அவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி அறிவித்தார்.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாஸித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




