ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மற்றும் பொருத்தமற்ற பகுதிகளை நீக்கி திருத்தப்பட்ட நூல்களை மட்டுமே பாடசாலைகளுக்கு விநியோகிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பாடநூல்களில் உள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் அகற்றப்பட்ட பின்னரே எதிர்கால விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
இந்தப் பாடத்திட்டத் தொகுதிக்காக சுமார் மூன்றரை இலட்சம் நூல்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் இதற்காக 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது இந்த நூல்கள் கொழும்பில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை எந்தப் பாடசாலைக்கும் விநியோகிக்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தினார்.
பொருத்தமற்ற பகுதிகளை அகற்றிய பின் மீதமுள்ள உள்ளடக்கம் கொண்ட பாடநூல்கள் விநியோகிக்கப்படும் என்றும் இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.