பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் முழுமையாக வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாமென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2026 ஆம் ஆண்டில் 5 முதல் 13 வரையிலான தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை மாற்றமின்றி தொடரும். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் ஆகியவை 2026 ஆம் ஆண்டின் முதல் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளன.
தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளில் 7 பாடவேளைகள் நடைபெறுவதுடன் ஒவ்வொரு பாடவேளைக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் 1 மாணவர்களுக்கான அறிமுகச் செயற்பாடுகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகி உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கும்.
தரம் 1 இற்கான செயற்பாட்டு புத்தகங்களும், தரம் 6 இற்கான கற்றல் தொகுதிகளும் (Learning Modules) சம்பந்தப்பட்ட தரங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் ஏனைய தரங்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2025 கல்விப் பொதுத் தர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிகள் 2026 ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன. இதனுடன் தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.