சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான 8 இலட்சம் அட்டைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 2 இலட்சத்து 40 ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவற்றை உரிய உரிமையாளர்களிடம் வழங்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கும் அனைவருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதிக்குள் நிரந்தர அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஏற்பட்ட அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 4.5 இலட்சம் பேருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டிருந்தன. அவர்களில் எஞ்சியுள்ள 2 இலட்சத்து 10 ஆயிரம் பேருக்கான நிரந்தர அட்டைகளும் பெப்ரவரி மாத இறுதிக்குள் அச்சிட்டு விநியோகிக்கப்பட உள்ளன.
பொதுவாக மாதந்தோறும் 60,000 முதல் 80,000 வரை புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் தற்போது தேவையான அளவு அட்டைகள் முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் அட்டை தட்டுப்பாடு ஏற்படாது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.