இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையை தொடர்ந்து பாதித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஜனவரி 5ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதேபோன்று வடக்கு மாகாணம் முழுவதிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதேபோல் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை வேகமுடைய பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.