வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டமை அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரான அத்துமீறலாக வடகொரியா கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வெளிப்படையான மேலாதிக்க அரசியலின் வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டு, அதனை வடகொரியா வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் முரட்டுத்தனமான மற்றும் கொடூரமான இயல்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மதுரோ பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபை சாசனத்துக்கும், இறையாண்மை, தலையிடாமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் முற்றிலும் எதிரான செயல் என வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது.
பிற நாடுகளின் இறையாண்மையில் அமெரிக்கா தொடர்ச்சியாக தலையிடுவதற்கு எதிராக உலக நாடுகள் முறையான எதிர்ப்பையும் கண்டனக் குரலையும் எழுப்ப வேண்டும் எனவும் வடகொரியா வலியுறுத்தியுள்ளது.