Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

வெனிசுலா இறைமையை மீறிய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு JVP எதிர்ப்பு

Posted on January 4, 2026 by Admin | 106 Views

அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்டதாக கூறப்படும் நடவடிக்கைகள் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்றதாக கூறப்படும் இந்த நடவடிக்கையை JVP கடுமையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகின் ஏனைய சுதந்திர, இறைமையுள்ள நாடுகளைப் போலவே, வெனிசுலாவின் எதிர்காலத்தையும் அந்நாட்டை ஆளப்போகும் தலைமையையும் தீர்மானிக்கும் முழு அதிகாரமும் அந்த நாட்டின் மக்களுக்கே உரியது என்றும், அந்த இறைமையை மீறும் உரிமை எந்த வெளிநாட்டு சக்திக்கும் இல்லை என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முழுமையான ஊடக அறிக்கை கீழே வெளியிடப்பட்டுள்ளது

சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்று, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

உலகின் எந்தவொரு சுதந்திர, இறைமையுள்ள நாட்டைப் போலவே வெனிசுலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை. 

நவீன சமூகமும், அரச நிர்வாகமும் மிகவும் பண்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறைமை என்பன உலகமே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடுகளாகும். எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை மீறி, நாடுகளுக்குள் இராணுவத் தலையீடுகள் அல்லது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது நவீன நாகரிக உலகில் நியாயமானதல்ல. 

இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவினால் வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவத் தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். 

எனவே, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், வெனிசுலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கின்றோம். 

அரசியல் சபை 

மக்கள் விடுதலை முன்னணி  2026.01.04