இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகி வலுப்பெற்றுள்ள ஆழமான தாழமுக்கம் இன்று மாலை 4 மணியளவில் பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 230 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம் மேற்கு–வடமேற்குத் திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவைக் கடந்து நகர்ந்து நாளை (09) பிற்பகல் 5.30 மணி முதல் 11.30 மணி வரையிலான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டையும் மட்டக்களப்பும் இடைப்பட்ட இலங்கைக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். ஊவா மாகாணத்துடன் நுவரெலியா, மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள் உள்ளிட்ட வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்கள், அதேபோல் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 50–60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.