போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து சந்தேகநபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தகவலின்படி பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான சுற்றிவளைப்புகளின் போது இந்தக் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்புகளின் போது டுபாயில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பயன்படுத்தப்பட்ட 10 ஒப்பந்தங்கள், வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்குரிய 27 விண்ணப்பப் படிவங்கள், போலி ஆவணங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் அரச பாடசாலை அதிபர்கள், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அரச அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பெயர்களில் போலியாக தயாரிக்கப்பட்ட பெருமளவிலான உத்தியோகபூர்வ இலச்சினைகள் (Seals) என்பனவும் சான்றுகளாக மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.