(பொத்துவில் செய்தியாளர்- ஹுதா)
பொத்துவில் – அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் வணக்க வழிபாடுகள் நடத்தி வந்ததாக கூறப்பட்ட ‘சபாத்’ இல்லம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது. குறித்த காணியை மீளப் பெற்ற அதன் உரிமையாளர் தமீமின் நடவடிக்கை பல தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
பொத்துவிலைச் சேர்ந்த தமீம் சுற்றுலா ஹோட்டல் அமைப்பதற்காக விற்பனை செய்த இந்த காணி பின்னர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் பெற்றுக் கொள்ளப்பட்டு ஹோட்டல் மற்றும் உணவகமாக இயக்கப்பட்டு வந்தது. அதேவேளை அந்நாட்டு பிரஜைகள் ஒன்று கூடும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு அங்கு வணக்க வழிபாடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டதால் ‘சபாத்’ இல்லம் தொடர்பாக அண்மைக் காலமாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றதுடன் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்து பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் வரை சென்றது.
இந்தச் சூழ்நிலையில் காணியை வழங்கிய தமீமும் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம்கொடுத்து வந்தார். பொதுமக்களிடையே ஏற்பட்ட பதற்றத்தையடுத்து தமீம் தனது தனிப்பட்ட முயற்சியால் அதிக விலைக்கு அந்தக் காணியை மீளப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் தமீம் தலைமையில் பால் சோறு வழங்கப்பட்டு துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அப்துல் வாசித், சட்டத்தரணி சாதீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். சமுசாரப், முன்னாள் உறுப்பினர் அப்துல் மஜீத், தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் ‘சபாத்’ இல்லமாக இயங்கிய இடங்களில் முதன்முறையாக உரிமையாளர் மீளப் பெற்ற இடம் அறுகம்பையிலுள்ள இதுவே எனக் கூறப்படுகிறது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி இரவு பகலாக முயன்று தனது காணியை மீளப் பெற்ற தமீம் பலராலும் பாராட்டப்படுகிறார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தமீம், “இந்த இடத்தை வழங்கியதால் நான் சந்தித்த கஷ்டங்களும் விமர்சனங்களும் ஏராளம். இனி யாரும் இவ்வாறான இடங்களை விற்பனைக்கோ வாடகைக்கோ விட வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.


