அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பிள்ளைக்கும் 6,000 ரூபாய் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதி உதவியை அஸ்வெசும திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தில் சேர்க்கப்படாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் 300க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் துறவுப் பெண்கள் ஆச்சிரமங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், துறவு மாணவர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கி பாடசாலை செல்லும் மாணவர்களும் இந்த நிதி உதவியை பெற தகுதியுடையவர்களாக உள்ளனர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது முழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.