புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 06 ஆம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) பிற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறை தொடர்பாக ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி முதலாம் தரத்திற்கான சீர்திருத்தப் பணிகள் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
அதே நேரத்தில் பாடத்திட்டக் கற்றல் தொகுதிகள் தயாரிப்பில் காணப்படும் சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் கருத்துத் தெரிவித்த ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கல்வித் துறையில் மறுசீரமைப்பு அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டதாகவும், புதிய கல்வி மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் பணியில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.