தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் விழா இன்று (15) உலகெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களும் தங்களின் பண்பாட்டு மரபுகளைப் பேணிக்காக்கும் விதமாக இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இயற்கைக்கு, குறிப்பாக செழிப்பை அளித்த சூரிய தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விழாவாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்களின் முதல் அறுவடையை சூரியனுக்குப் படைத்து நன்றியினை வெளிப்படுத்துவது இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.
மேலும் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு மரியாதை செலுத்துவதும் தைப்பொங்கல் விழாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது.
பால் கொதித்து வழியச் செய்து, அனைவருக்கும் வளமும் நலனும் பெருக வேண்டும் எனப் பிரார்த்திப்பது இவ்விழாவின் முக்கிய சடங்காகும். தைப்பொங்கல் நாள் தமிழர்களின் புதிய ஆண்டின் தொடக்க நாளாகவும் கருதப்படுகிறது.
இந்த இனிய நாளில் அனைவருக்கும் தெளிவு ஊடக வலையமைப்பின் மனமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.