ஈரான் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளதுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் “குற்றவாளி” எனக் கடுமையாக விமர்சித்தார்.
ஈரானுக்கு எதிராக சமீப காலமாக உருவாகியுள்ள கிளர்ச்சியானது முன்னைய போராட்டங்களிலிருந்து மாறுபட்டதாக இருப்பதாகக் குறிப்பிட்ட கமேனி இதில் அமெரிக்க ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் நேரடியாக தலையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈரானில் நடைபெற்று வரும் பரவலான வன்முறைகள் மற்றும் அழிவுகளுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நபர்களே காரணம் என அவர் கூறினார்.
குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய தரப்பினரே கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டை உலுக்கி வரும் போராட்டங்களின் போது பெரும் சேதங்களை ஏற்படுத்தியதுடன், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காரணமாக உள்ளதாகவும் கமேனி சுட்டிக்காட்டினார்.
ஈரானில் நிலவும் அமைதியின்மைக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் என அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. குறிப்பாக, ஈரானின் நீண்டகால புவிசார் அரசியல் எதிரிகளான அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த ஸ்திரமற்ற சூழலைத் தூண்டிவிட்டு, களத்தில் போராட்டங்களை வழிநடத்துவதாக ஈரான் கருதுகிறது.
இதற்கிடையில், ஈரான் தனது எல்லைகளைத் தாண்டி போரை விரிவுபடுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்த கமேனி, இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தாலும் அவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
“நாட்டை போருக்குள் இழுத்துச் செல்ல மாட்டோம். ஆனால் குற்றம் செய்தவர்கள் தண்டனை இன்றி தப்பிக்க அனுமதிக்க மாட்டோம்” என அவர் திட்டவட்டமாகக் கூறினார்