போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ‘குறைப்புப் புள்ளிகள்’ வழங்கும் புதிய முறைமை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வீதி பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
கேகாலை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
GovPay செயலி மூலம் அபராதத் தொகைகளை செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அதனுடன் இணைந்து இந்த குறைப்புப் புள்ளி முறைமையும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இதனிடையே போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனம் ஓட்டிய சாரதிகளுக்கு எதிராக 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையை துல்லியமாக கண்டறியும் நோக்கில் புதிய பரிசோதனை உபகரணமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அது நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.
மேலும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் தேவையற்ற உதிரிப்பாகங்களை அகற்றாமல் இயக்கும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர வலியுறுத்தினார்.