(அட்டாளைச்சேனை செய்தியாளர்- மஹாத்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றாத மாட்டிறைச்சிக் கடைகள் தொடர்பாக திடீர் ஆய்வு நடவடிக்கையினை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையிலான குழு இன்று (05) முன்னெடுத்தது.
மாடுகளை அறுக்கும் போது நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, பிரதேச சபையால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை மக்களின் பார்வைக்கு தெளிவாக காட்சிப்படுத்தி இறைச்சி விற்பனை நடைபெறுகிறதா என்பவற்றை ஆய்வு செய்யும் நோக்கில் இத்திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் பிரதேச சபையின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இன்று நான்கு மாட்டிறைச்சிக் கடைகள் மாத்திரமே திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்தது.
அதேவேளை பிரதேச சபையில் முறையாக அனுமதி பெற்றிருந்த பல கடைகள் சபையின் சட்ட விதிகளை ஏற்க மறுத்து இன்றும் தங்களது கடைகளை மூடி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர.
இதனிடையே நாளை வெள்ளிக்கிழமை (06) மாட்டிறைச்சி கடைகளை திறக்காமல் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வியாபாரிகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என பிரதேச சபையினால் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
