அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் அல் இபாதா கலாசார மன்றத்தின் சமூக சேவைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்களின் நிருவாகத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சமூக, மார்க்க மற்றும் கல்வி அபிவிருத்தியை மையமாகக் கொண்டு அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்களின் நிருவாகத்தினர் கலந்து கொண்ட ஒன்றுகூடல் பாராளுமன்ற உறுப்பினரும் அல் இபாதா கலாசார மன்றத்தின் போசகருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் தலைமையில் 2026.02.09 ஆம் திகதி அட்டாளைச்சேனை சரா பீச் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த 14 வருடங்களாக அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றமானது ஆற்றங்கரையோரங்களின் தூய்மைப் பணிகள், மார்க்க வளர்ச்சி, மாணவர்களின் அறிவாற்றல் மேம்பாடு, கல்வி ஊக்குவிப்பு, சமூக ஒற்றுமை ஆகிய துறைகளில் தொடர்ச்சியான சேவைகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 15வது வருடமாக இவ்வருடம் ரமழான் மாதத்தில் நடைபெறவுள்ள ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க ஊரிலுள்ள உலமாக்களின் பங்களிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இளைஞர்களின் ஒழுக்கம், நற்பண்புகள், சிகையலங்காரம், போதைப்பொருள் தடுப்பு, குடும்ப ஒற்றுமை, மாணவர்களின் கல்விச் சாதனைகளை மேம்படுத்துதல், சமூகத்தில் அதிகரித்து வரும் ஒழுக்கச் சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குதல் போன்ற சமூக நலன் சார்ந்த பல விடயங்களும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேசத்தை ஒழுக்கமும் கல்வியும் நிறைந்த ஒரு சிறந்த சமூகமாக உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் குறித்து இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்களின் நிருவாகத்தினர் , அல் இபாதா கலாசார மன்றத்தின் நிருவாக உறுப்பினர்கள், மரைக்காயர் சபையினர், அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துல் உலமா சபையினர், அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் கலாநிதி ஏ.எல்.ஹனீஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

