வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின் படி நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (15) அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் சாத்தியமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.