இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரின் தொடக்கம் முதல் இதுவரை மொத்தமாக 1,929 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி காயமடைந்தவர்களில் 122 பேர் தற்போது வரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் சிலர் நேரடியாக ஏவுகணைத் தாக்குதல்களால் பாதிக்கப்படாதவர்களாகவும், பிற காரணங்களால் காயமடைந்தவர்களாகவும் இருக்கலாம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 157 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் நேற்று(08) காலை உள்ளூர் நேரப்படி 07.00 மணியளவில் வெளியிடப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது டெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கவும் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.