இலங்கையில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமையில் இதுவரை சுமார் 60 இலட்சம் மக்கள் பதிவு செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அண்மைக்காலத்தில் மட்டும் சுமார் 20 இலட்சம் பேர் புதியதாக இந்த முறைமையில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் மொத்தப் பதிவுகள் 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
QR குறியீட்டு முறைமையில் பதிவு செய்வதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் அனைத்தும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக QR குறியீடுகளைப் பதிவிறக்கம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து வைக்கும் சம்பவங்கள் தொடர்பாகப் புகார்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை சாத்தியமான வரையில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.