(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அனுபம மங்கள விக்கிரமாரச்சி அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நேற்று (26.03.2026) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைவாக உரக் கூட்டுத்தாபனத்திடமிருந்து உரங்களை பெற்று விவசாய திணைக்களத்தினுடாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனடிப்படையில் யூரியா உரம் ரூபா 9900 முதல் 10200வரை, TSP உரம் ரூபா 12500க்கும் , MOP உரம் ரூபா 8500க்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தேவையேற்படின் தனியார்களுக்கும் விநியோகிப்பதற்கும் ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உர வியாபாரிகளின் போலியான கருத்துக்களுக்கு அகப்பட்டு தேவையில்லாத அச்சத்தில் மூழ்க வேண்டாம் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங் அதிபர் திரு. அனுபம மங்கள விக்கிரமாரச்சி தெரிவித்தார்.
மேலும் விவசாய பணிகளின் போது உழவுவதற்கு ஒரு ஏக்கருக்கு 30 லீற்றர் எரிபொருளும் , அறுவடை செய்வதற்கு 15 லீற்றர் எரிபொருளும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான அனுமதியினை விவசாயிகள் கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளரிடம் அல்லது விவசாய அமைப்புகளினூடாக கமநல சேவை அதிகாரியிடமும் பெற்றுக்கொண்டு தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
நெல் , உரம் விநியோகத்தின் போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமாயின் குறித்த தரப்பினர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான விசேட அனுமதியினை பிரதேச செயலாளர் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிகழ்ச்சித் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அனுமதிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர்,
கே.கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
