திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்று (31) இலஞ்ச தடுப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக ரூ.5 லட்சம் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் முபாரக் (வயது 50) மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷாத் (வயது 34) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இக்பால் நகர் பகுதியில் இலஞ்ச ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆணைக்குழுவின் தகவலின்படி, முறைப்பாட்டாளரிடமிருந்து ஏற்கனவே 20 பேர்ச் காணி அனுமதிப்பத்திரங்களுக்காக 160,000 ரூபாவை இலட்சம் பெற்றிருந்த தவிசாளர், மீதமுள்ள காணிகளுக்காக மேலும் ரூ.5 இலட்சம் கோரியுள்ளார்.
அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டபோதே இருவரும் இலஞ்ச ஆணைக்குழுவினரால் பிடியாணையிடப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நிலாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முபாரக் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) சார்பில் வெற்றி பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் (ITAK) இணைந்து குச்சவெளி பிரதேச சபையை நிர்வகித்து வந்தார்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.