(பாலமுனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைக்கான 09 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று(02) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஜே.எம்.பைறூஸ் அணியினர் 02 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டதுடன் பைறூஸிற்கு எதிராக 07 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தெரிவு செய்யப்பட்ட இயக்குநர் சபைக்கான 09 உறுப்பினர்களும் இணைந்து அவர்களுக்குள் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிகழ்வானது இன்று(03) மாலை அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஓய்வு நிலை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பீ.எம்.சரீப்(RDO) அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி தலைவராக பாலமுனையைச் சேர்ந்த ஐ.ரி.ஹனீன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவரை தெரிவு செய்யும் நிகழ்வின் போது அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஜே.எம்.பைறூஸ் கலந்து கொள்ளவில்லை ஆனால் குறித்த நிகழ்வில் பின்னர் இணைந்து கொண்டார்.
ஓய்வு நிலை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பீ.எம்.சரீப்(RDO) அவர்கள் தனது இளமைக்காலத்திலிருந்தே சமூக அமைப்புகளில் இணைந்து மக்கள் நலனுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவரும் பொதுச்சொத்துக்களை கபளீகரம் செய்யாமல் மக்கள் அபிவிருத்திக்காக பயன்படுத்தியவருமாவார். இவரது நேர்மையும், பொதுச்சொத்துக்களை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தும் பண்பும் சமூகத்தில் பெரிதும் பாராட்டப்படுவதுடன் இவரது தலைமைத்துவமே மிகவும் பொருத்தமானது எனவும் இதனூடாக தாம் மகிழ்ச்சியடைவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய இயக்குநர் சபையானது கடந்த கால இயக்குனர் சபை போன்று “பொதி சுமக்கும் உயிரினம்” போன்று விமர்சனத்திற்குள்ளாகாமல் மக்களுக்கான சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வெளிப்படைத்தன்மை மற்றும் செயல் திறன் ஆகியவற்றில் முன்னுதாரணமாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




